திரு. வி.பி.ஜெயக்குமார்
திரு. வி.பி.ஜெயக்குமார் - மாநில துணைத் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி கிராமத்தில் 26.6.1951ல் தெய்வதிரு V.V.பெருமாள் தெய்வ திருமதி V.P.ராமேஸ்வரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் தனது 24வது வயதில் 1975 ல் RSS ன் அப்போதைய பரிவார் அமைப்பான ஜன சங்கத்தில் இணைந்து தன்னுடைய சமுதாய பணியை துவக்கினார். 1976 ல் திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லை மாவட்ட ஜன சங்க மாவட்ட மாநாட்டில் ஜன சங்க கொடியை ஏற்றி துவக்கி வைத்தவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் .
இந்து முன்னணி பேரியக்கம் துவக்கப்பட்ட பின்பு 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் இந்து எழுச்சி மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு ஐயா தாணுலிங்க நாடார், இராம.கோபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களது கைதை கண்டித்து திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தி திருV.P.ஜெயகுமார் அவர்களும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் பாளையங்கோட்டை சிறையில் தான் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களையும் இராம.கோபாலன் அவர்களையும் V.P.ஜெயக்குமார் அவர்கள் முதன் முறையாக சந்திக்கிறார்.
ஜெயக்குமார் அவர்களின் தந்தையார் திரு. வி. வி. பெருமாள் அவர்கள் அன்றைய காங்கிரஸ் பேரியக்கத்தில் நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான நபர். அவரது மகன் கைது செய்யப்பட்ட விவரம் குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியாகி அந்த நாளிதழ் செய்தியை சிறையில் படித்த அய்யா தாணுலிங்க நாடார் அவர்கள் சிறைக்குள் திரு வி.பி.ஜெயகுமார் அவர்களை அழைத்துப் பேசுகிறார் . சிறையில் இருபெரும் தலைவர்களிடமும் இளமை துடுக்கோடும், குறும்போடும் பேசி அவர்களின் அன்புக்கு பாத்தியம் ஆகிறார். அதன்பின்பு இந்துமுன்னணி பேரியக்கத்தில் திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளராக முதன்முறையாக பொறுப்பு அறிவிக்கப்பட்டு திருச்செந்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து திண்ணை கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் என நடத்தி இந்து முன்னணி பேரியக்கத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்றுள்ளார்.
1985-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனியாக பிரிக்கப்பட்ட உடன் இந்து முன்னணி பேரியக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்படுகிறார். 1988 ஆம் ஆண்டு சிவகங்கையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழுவில் இந்து முன்னணி மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். பல வருடங்கள் மாநிலச் செயலாளராக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி பேரியக்கத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்து தற்போது வரை வழிநடத்தி வருகிறார். உடன்குடியில் ராமகிருஷ்ணா பள்ளி ஆரம்பிப்பதற்கு மிகப் பெரும் போராட்டத்தை நடத்தி அதனை சாதித்துக் காட்டியவர் திரு வி பி ஜெயக்குமார் அவர்கள்.
தென் மாவட்டங்களில் கடுமையான மதமாற்றம் பயங்கரவாத செயல்கள் ஹிந்து விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடி பல வெற்றிகளை கண்டவர். தேசத்திற்காக வயதைக் காரணம் காட்டாமல் அயராது உழைத்து இந்துமுன்னணி ஊழியர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.